#Erode கிழக்கு இடைத்தேர்தல் | திமுக, நாதக வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாதக கட்சிகள் வேட்பாளர் அறிவித்து போட்டியிடுவதாக அறிவித்தனர். 53 வாக்குப்பதிவு மையத்தில் உள்ள 237 வாக்குச்சாவடியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார் மற்றும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தமாக 66 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று (ஜன.18) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமாரின் மனு ஏற்கப்பட்டுள்ளது. இதேபோல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமியின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சுயேச்சைகள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும். பிப்ரவரி) 5-ம் தேதி வாக்குப்பதிவும், 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.