ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாதகவினர் கைது!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (ஜன.17) நிறைவுபெறவிருக்கிறது. இதில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார் மற்றும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
இந்த நிலையில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக அனுமதியின்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கான சின்னம் அறிவிக்கப்படாத சூழலில், காணும் பொங்கலன்று ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் நாதகவினர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வேட்பாளர் சீதாலட்சமி புகைப்படம் போட்ட பதாகைகளை ஏந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக நிலை கண்காணிப்பு குழுவினர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட செயலாளர் நவநீதன் உள்ளிட்ட 5 பேர் மீது வடக்கு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் அடையாளம் தெரியாத 3 பேர் மீது தேர்தல் நடத்தை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.