ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் விலகல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5-ம்தேதி நடைபெற உள்ளது.
இதற்காக ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அக்கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்திய கூட்டணி சார்பாக திமுக அத்தொகுதியில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பை செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
“2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், முதல் அமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.