#Erode கிழக்கு இடைத்தேர்தல் | சீமான் மீது வழக்குப் பதிவு!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாதக கட்சிகள் வேட்பாளரை அறிவித்து போட்டியிடுவதாக அறிவித்தனர். அதன்படி, திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். திமுக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் திமுக மற்றும் நாதக கட்சிகள் தேர்தல் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலையொட்டி அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் பொதுக்கூட்டம் நடத்தியதாக சீமான் மீது பறக்கும் படை அதிகாரி நவீன் புகார் அளித்தார். இதன் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் சீமான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.