திருச்சியில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்!
திருச்சி, உறையூரைச் சேர்ந்த லதா (வயது 60) மருதாம்பாள் (85) மற்றும் பிரியங்கா (4) ஆகிய 3 பேர் வாந்தி, வயிற்றுப் போக்கு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்களின் இறப்புக்கு குடிநீரில் கழிவு நீர் கலந்தது தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுடினர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "15 நாட்களாக குடிநீரில் பிரச்னை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர். உடனடியாக இந்த உயிரிழப்புகளுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; தமிழ்நாடு முழுக்க குடிநீரை சுகாதார முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இது குறித்து அவர், "50க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்கள் புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.