திமுக கூட்டணியில் விவாதங்கள் ஏற்படுகிறதே தவிர, விரிசல்கள் ஏற்படவில்லை - #EPS-க்கு முதலமைச்சர் #MKStalin பதில்!
பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டிருப்பார்களே அதுபோல பக்கத்து கட்சியில் என்ன பிரச்னை என எடப்பாடி பழனிசாமி பார்த்துக்கொண்டிருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கட்சி உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கும்முடிப்பூண்டி கி.வேணு இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர் பாபு உள்ளிட்டோரும், திமுக சட்டமன்ற மாமன்ற உறுப்பினர்கள் திமுக உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது,
“மக்களால் போற்றப்படக்கூடிய ஆட்சியாக திமுக இருக்கிறது. மிசா சட்டத்தில் எங்களுடன் கைதாகி இருந்த போது பாதுகாவலராக, நண்பராக விளங்கியவர் வேணு. அவரின் திருமணம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இன்று அவரின் பேரன் திருமணத்தை நடத்தி வைத்ததில் பெருமை கொள்கிறேன். நடந்து முடிந்த முப்பெரும் விழாவில் கலைஞர் விருதை வேணுவுக்கு தான் வழங்கினோம். உடல்நலம் சரியில்லாத போதும் வந்து நேரில் வாங்கினார். அதனால் திமுகவை பொறுத்தவரை மக்கள் பணியாற்றுவதில் சிறந்து விளங்கி வருகிறோம். மக்களுக்காக உறுதிமொழிகளை மட்டுமல்லாமல், தராத வாக்குறுதிகளையும், சாதனைகளையும் திமுக செய்து வருகிறது.
ஆனால் மக்களால் ஒதுக்கப்பட்ட பழனிசாமி தன்னுடைய பொறாமை தாங்க முடியாமல் திமுக அரசை பேசிவருகிறார். இப்படியெல்லாம் சாதனைகள் செய்து கொண்டும் மக்களின் உள்ளத்தில் ஆழமாக திமுக பதிந்து கொண்டிருக்கிறது. இன்னமும் இவர்களுடைய செல்வாக்கு வளர்ந்து கொண்டு இருக்கிறதே என்ற பொறாமையின் காரணமாக பழனிசாமி திமுக ஆட்சியினுடைய செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
திமுகவின் கூட்டணி விரைவில் உடைய போகிறது என்று பேசுகிறார். இத்தனை நாட்கள் எடப்பாடி பழனிசாமி கற்பனையில் தான் மிதந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது அவர் ஜோசியராகவே மாறி இருக்கிறார். எப்பொழுது அவர் ஜோசியராக மாறினார் என்று எனக்கு புரியவில்லை?. பழனிசாமியைப் பார்த்து நான் கேட்பது எங்களுடைய கூட்டணி என்பது ஏதோ தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. இது கொள்கை கூட்டணி. எங்கள் கூட்டணிக்குள் விவாதங்கள் நடக்கலாம். எங்களுக்குள் பேச்சுக்கள் நடக்கலாம். எங்களுக்குள் பல விவாதங்கள் ஏற்படுகிறதே தவிர, விரிசல்கள் ஏற்படவில்லை.
பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டிருப்பார்களே? அதுபோல பக்கத்து கட்சியில் என்ன பிரச்னை என எடப்பாடி பழனிசாமி பார்த்துக்கொண்டிருக்கிறார். தன்னுடைய கட்சியை வளர்க்காமல், வளர்ந்திருக்கக் கூடிய கட்சியைப் பார்த்து மக்களிடத்தில் ஓங்கி உயரமாக நிற்கக்கூடிய இயக்கத்தைப் பார்த்து ஜோசியம் செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
திமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தாலும் மழைக்காலத்தில் மக்களை சந்தித்தோம். இப்பொழுது ஆட்சி என்ற அதிகாரத்தில் இருக்கின்ற காரணத்தால் இன்றைக்கும் மக்களை சந்தித்து மக்களுக்கு என்ன பிரச்னை என்பதைக் கேட்டு அறிந்து அதற்குரிய பணிகளை செய்கிறோம்” இவ்வாறு தெரிவித்தார்.