கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 218 ஆக அதிகரிப்பு!
கரீபியன் தீவு நாடான டொமினிகன் ரிபப்ளிக் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் இரவுநேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்பட பிரபலமானவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 500 முதல் 1,000 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது, கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்த நிலையில்100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்தது. இந்நிலையில், படுகாயம் அடைந்த 160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பலர் இறந்ததால் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், உயிரிழந்தவர்களில் பலர் சுற்றுலா பயணிகள் என்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே உடைமைகளை வைத்து அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.