“ரயில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்!” - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்!
ரயில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி ரயில்வே அமைச்சருக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் கஞ்சன் ஜங்கா ரயில் விபத்தைப் போல, மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க 3 காரணிகளை வலுப்படுத்த வேண்டும் என்று வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:
நான் ஏற்கனவே தங்களுக்கு 5.06.2023 மற்றும் 13.06.2023 முதலென தேதிகளில் எழுதி உள்ள கடிதங்களைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன், அக்கடிதங்களில் ரயில்வே கட்டுமானங்களில் பராமரிப்பின்மை, நிதி பற்றாக்குறை மற்றும் போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாமல் போன்ற 3 காரணங்களால் அடிக்கடி ரயில் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று குறிப்பிட்டு இருந்தேன்.
ஆனால் நான் மேலே குறிப்பிட்டுள்ள குறைபாடுகள் இன்னமும் தொடர்கின்றன என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. மேலும் தற்போது ரயில்வே துறைகளில் பெரிய அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று தெரியவிருக்கின்றேன். ரயில்வே மண்டல பகுதிகளில் ஏப்ரல் 2024 முதல் ஜூன் 2024 வரை பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் ஏப்ரல் மாதத்திலேயே முழுவதுமாக செலவழிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரயில்வே தளவாடங்களில் போதிய பராமரிப்புப் பணிகள் செய்யப்படாமல் உள்ளது. மேலும் வருவாய் செலவினங்களை மூலதன செலவினங்களாக, காட்டும் பழக்கத்தை ரயில்வே மண்டலங்கள் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது, இது மிகவும் தவறான முறையாகும். தணிக்கைத்துறை இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் ரயில்வே துறைகளில் ஏற்பட்டுள்ள ஆட்கள் இல்லாமையால், ரயில்வே தடவாடங்களின் பாதுகாப்பு கருவிகளை இயக்க கூட போதுமான பணியாளர்கள் இல்லை . எனவே பாதுகாப்பு பணிகளுக்கான தொழில் நுட்ப பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்று எனது முந்தைய கடிதங்களில் குறிப்பிட்டுடிருந்தேன்.
இப்போது ரயில்வே துறை 5700 தொழில்நுட்ப பணியிடங்கள் உட்பட்ட 9000 பணியிடங்களை மட்டும் ஆட்களை பணியமத்துவதற்கு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் லோகோ பைலட் பணியிடங்கள் ரயில்வே அமைச்சரின் நேரடி ஆணைப்படி 70 சதவீதப் பணியிடங்கள் குறைக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது .
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரயில்வே துறையில் 1.8 லட்சம் தொழில்நுட்ப பணியிடங்கள் உட்பட்ட, 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, பாராளுமன்றத்தில் நீங்கள் பேசும் போது தெரிவித்திருந்தீர்கள். அப்படி இருக்கும் போது, வெறும் 9000 பணியிடங்கள் மற்றும் நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிட்டுள்ளதற்கு காரணம் என்ன?
ரயில்வே தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த பாதுகாப்பு பணியாளர்கள் போதிய அளவில் இல்லாதது தான் அடிக்கடி விபத்துக்கள் நேர்கின்றன. இவற்றில் ரயில்வே பணியில் இருப்பவர்கள் பலர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பொதுமக்களும் உயிரிழந்திருக்கின்றனர். ரயில்வேத் துறை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்தி போதுமான பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
எனது முந்தைய கடிதங்களில் ரயில்வே துறையின் அவசரக்கால உதவிக்கு தயார் நிலையில் பணியாளர்கள் இல்லாமையால் விபத்துக்கள் நடைபெறும் போது மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்துக்குச் செல்வதில் காலதாமதம் ஏற்படுகின்றது என்று குறிப்பிட்டு இருந்தேன். இப்போது நடைபெற்ற கன்ஜன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் கூட விபத்துப் பகுதியில் பக்ரீத் பண்டிகை நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய சகோதரர்கள், உடனடியாக மீட்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் என்பதை அறிவோம், ரயில்வே துறையின் மீட்பு படையினர் அங்கு வந்து சேர்வதற்கு இரண்டு மணி நேரம் ஆனதாகக் கூறப்படுகிறது, விபத்து நடந்த இடத்திற்கும் ஜல்பாய்குறி ரயில்வே நிலையத்திற்கும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரமே உள்ளது, அங்கு வந்து சேர்வதற்கு ஏன் இவ்வளவு தாமதமானது? போதுமான அளவிற்கு தொழில்நுட்ப பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தால் இந்த காலதாமதம் ஏற்பட்டிருக்காது?
நிலாவில் தென் துருவத்தை ஆராய்வதற்காக நமது நாடு, செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது என்று நாம் பெருமை பேசிக் கொள்ளும் வகையில், நமது நாட்டில் ரயில் பயணிகளின் உயிருக்கும், உடைமைக்கும் நாம் உறுதி செய்யாது இருப்பது நமக்குப் பெரிய அவமானம் என்று நான் கருதுகிறேன், ஜப்பான் நாட்டில் ரயில்கள் மணிக்கு 300 முதல் 350 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன. அங்கு தசாப் தளங்களுக்கு, ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதை கூட பதிவு செய்யப்படவில்லை. எனவே நாமும், நமது ரயில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். விரைவில் அந்த குறைகளை நாம் சரி செய்யும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு டாக்டர் கலாநிதி வீராசாமி எம்பி அக்கடிதத்தில் கூறியுள்ளார்.