ENG vs PAK | பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி - 460 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று (அக்.7) தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 86 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 328 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷபீக் 102 ரன்களும், ஷான் மசூத் 151 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து, இன்று (அக்.8) 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
இதில், தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 149 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 556 ரன்கள் குவித்தது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தரப்பில் ஆகா சல்மான் 104 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் க்ராவ்லி மற்றும் ஆலி போப் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஆலி போப் டக் அவுட் ஆனார். இவரையடுத்து, ஜோ ரூட் களம் இறங்கினார். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஜேக் க்ராவ்லி 64 ரன்னுடனும், ஜோ ரூட் 32 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 460 ரன்கள் பின்னிலையில் உள்ளது. தொடர்ந்து, நாளை (அக்.9) 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.