ஆதவ் அர்ஜுனா வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!
இரண்டு நாட்களாக விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை இன்று நிறைவடைந்தது.
சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் நவ.14 முதல் 3 நாட்களாக துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கோவை துடியலூரில் உள்ள மார்ட்டினுடைய வீடு மற்றும் மார்ட்டின் குழும அலுவலங்கள் மட்டுமல்லாமல், சிக்கிம், அசாம் போன்ற மாநிலங்களில் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 3 நாட்களாக அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மார்ட்டினின் வீடு மட்டுமின்றி மார்ட்டினின் மகன் வீடு மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளரும், அவரின் மருமகனுமான ஆதவ் ஆர்ஜுனா வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ஆதவ் அர்ஜுனா வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை இன்று நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.