நடிகர் மகேஷ்பாபுவிற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குண்டூர் காரம். இந்நிலையில் நடிகர் மகேஷ்பாபுவிற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் நடிகர் மகேஷ் பாபு ஏப்ரல் 27ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஹைதபாத்தில் உள்ள சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனங்கள் ஒரே இடத்தை பலருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த இரு நிறுவனங்களிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போதுதான் இந்த நிறுவனங்களுக்கு மகேஷ்பாபு விளம்பர தூதராக இருப்பது தெரியவந்தது.
ரூ 5.9 கோடியை மகேஷ் பாபு இரு ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் இருந்து சம்பளமாக பெற்றுள்ளார். அதில் 3.4 கோடி காசோலையாகவும், ரூ 2.5 கோடி ரொக்கமாகவும் மகேஷ் பாபுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த பணம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் கிடைத்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடிகர் மகேஷ் பாபு, இந்த மோசடியில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், அவர் விளம்பர தூதராக இருந்தமைக்காக ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து அவர் பெற்ற பணம் குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.