அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் 471 நாள் சிறைக்கு பிறகு செந்தில் பாலாஜி்க்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முன்பு செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகள் அவருக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது.
அவர் அமைச்சராக இருப்பதால், அரசு ஊழியர்களாக இருக்கும் சாட்சிகள், வழக்கில் சாட்சி அளிக்க வர மறுப்பதாக புகார்கள் எழுந்தன. அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் பண மோசடியில் பாதிக்கப்பட்ட புகார்தாரர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா என்பதை கேட்டுச் சொல்லுங்கள்' என்று அவரது வழக்கறிஞரிடம் தெரிவித்தது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. அதில், "செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இது அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சிகளாக உள்ளவர்கள் முன்பு இவரின் கீழ் பணி புரிந்தவர்கள். எனவே அவர்கள் செந்தில் பாலாஜிக்கு எதிராக சாட்சியம் அளிக்க அச்சப்படக்கூடும். இது வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அவரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.