சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை - விசாரணையை தொடங்கிய காவல்துறை!
ஏழை விவசாயிகளுக்கு ஜாதி பெயரை கூறி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தொடர்பான புகாரின் விசாரணையை போலீசார் தொடங்கினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை சார்பில் சாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன் தொடர்பாக சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வந்த எழுதப்படிக்கத் தெரியாத விவசாயிகள் இருவரும் மிரட்டி துன்புறுத்தப்பட்டதாக போலீசில், அமலாக்கத் துறை மீது வழக்கறிஞர் பிரவீனா என்பவர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு டிஜிபி உத்தரவிட்டார். உத்தரவின்பேரில், ஏழை விவசாயிகளான கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு, எந்த அடிப்படையில் ‘சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது? விவசாயிகளுக்கு ஜாதி பெயரை குறிப்பிட்டு ஏன் சம்மன் அனுப்ப வேண்டும் என்பது குறித்து போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக, விவசாயிகளுக்கு ஆதரவாக புகார் அளித்த பெண் வழக்கறிஞரான பிரவினாவிடம் நேற்று மாலை விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையில் ஏழை விவசாயிகளுக்கு ஜாதி பெயரை கூறி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் அளித்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் பிரவினா. அதைதொடர்ந்து, ஓரிரு நாளில் விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் விவசாயிகளின் 6.5 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்கும் நோக்கில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகி குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.