ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேசிய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அத்துடன், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து ஜூன் 26-ம் தேதி கைது செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் அமலாக்கத்துறை காவல் வழங்கி கடந்த ஜூலை 17-ம் தேதி உத்தரவிட்டது. அமலாக்கத்துறையின் காவல் முடிந்து இன்று (ஜூலை 19) ஜாபர் சாதிக், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், விசாரணை நிறைவடையாததால் மேலும் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மேலும் வரும் ஜூலை 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஜாபர் சாதிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ஜாபர் சாதிக் அழைத்துச் செல்லப்பட்டார்.