பொதுப்பணித் துறை தொடர்புடைய இடங்களில் அமலாக்கதுறை 2-வது முறையாக சோதனை!
சென்னையில் பொதுப்பணித் துறைக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கதுறை அதிகாரிகள் 2-வது முறையாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் 2-வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 3-ம் தேதி பொதுப்பணித் துறைக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அமித் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இவர் பொதுப்பணித் துறையில் அரசு கட்டிடப் பணிகளுக்கு மின்சாதனப் பொருட்களை சப்ளை செய்யும் முகவராக செயல்பட்டு வருகிறார். தற்போது மீண்டும் 2-வது முறையாக இவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே சோதனை செய்து சீல் வைக்கப்பட்ட அறைகள் மீண்டும் திறக்கப்பட்டு, சோதனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: ஜெயம் ரவி – நித்யா மேனன் இணைந்து நடிக்கும் “காதலிக்க நேரமில்லை” | பர்ஸ் லுக் வெளியீடு!
இதைப்போல புரசைவாக்கம் ஜெயின்லால் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வசிக்கும் ஜெயந்திலால் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. புரசைவாக்கம் பகுதிகளில், மேலும் சில இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனை ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடைபெறுகிறதா அல்லது புதிய வழக்கு தொடர்பான சோதனை நடத்தப்படுகிறதா என்பது குறித்த தகவல் இன்னும் அதிகாரிகள் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. தொடர்ந்து 7 வாகனங்களில் சென்றுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.