#TamilNaduInvestmentConclave | 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு அரசின் முயற்சியால் கடந்த மூன்று ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்து இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில்துறை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதை ஏதோ கடமையாக மட்டும் கருதாமல், தன்னார்வத்துடன் செயல்படுத்திக் காட்டி வரும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை அதிகாரிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதன் தொடர்ச்சியாக சில திட்டங்களை துவக்கி வைக்கவும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் நான் வந்திருக்கிறேன். 19 வகையான திட்டங்களை இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கிறேன். 17 ஆயிரத்து 616 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டங்கள் மூலமாக, 64 ஆயிரத்து 968 பேருக்கு வேலைகள் கிடைக்கப் போகிறது. 28 வகையான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இதன் மொத்த முதலீட்டு மதிப்பு 51 ஆயிரத்து 157 கோடி ரூபாய்.
இதன் மூலமாக, 41 ஆயிரத்து 835 பேருக்கு வேலைகள் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில் வளர்கிறது என்றால், அந்த நிறுவனம் மூலமாக, மாநிலம் வளர்கிறது; கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மூலமாக குடும்பங்களும் வளர்கிறது; வாழ்கிறது. அந்த வகையில், வளர்ச்சியின் அடையாளமாக தொழில் நிறுவனங்கள் இருக்கிறது.
அமைதியான சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலத்தை தேடித் தான் தொழில்துறையினர் வருவார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை தொழிலதிபர்களுக்கு வந்திருக்கிறது. அதன் அடையாளமாகத்தான், ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் தொழில் நிறுவனங்களை தொடங்கினால் மட்டும் போதாது; உங்களைப் போன்று இருக்கின்ற மற்ற தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வாருங்கள்... தொழில் தொடங்க வையுங்கள்...
தமிழ்நாடு அரசின் தொழில்துறை தூதுவர்களாக நீங்கள் எல்லோரும் மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று, இந்த 3 ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்களை தமிழ்நாடு ஈர்த்திருக்கிறது. அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்து, அதன்மூலமாக, 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற தமிழ்நாட்டின் இலக்கை அடைவதற்காக நம்முடைய அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது. இந்த இருமுனை முயற்சி, இப்போது சாதகமான பலன்களை தந்து வருகிறது. இன்றைய தினம் பல்வேறு வகையான திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறேன்.
* மோட்டார் வாகனங்கள்,
* பொது உற்பத்தி,
* தொழிற் பூங்காக்கள்,
* மின்னணுவியல்,
* மருத்துவ உபகரணங்கள்,
* தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள்,
* உணவு பதப்படுத்துதல்,
* ரசாயனங்கள்,
* ஜவுளி மற்றும் ஆடைகள்,
* உயிர் அறிவியல்,
* பசுமை ஹைட்ரஜன்.
கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட இருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் பெருமளவிலான பெண்களுக்கானவை. வேலைவாய்ப்புகள்பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்ற நம்முடைய அரசின் நடவடிக்கைகளுக்கு இந்த சாதனை மேலும் ஊக்கமளிக்கிறது.
அனைத்துத் துறை வளர்ச்சி; அனைத்து சமூக வளர்ச்சி; அனைத்து மாவட்ட வளர்ச்சி; என்று நான் சொல்லி வருவதன் அடையாளம் இவைதான். தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் நிலைக்கத்தக்க வளர்ச்சியை உறுதி செய்வதில் நம்முடைய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழில் திட்டங்கள் தொடங்கப்படுவதால், அந்த மேம்படுத்தப்படுகிறது. மாவட்டங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், அந்தப் பகுதிகள் உறுதியாக சமூக, பொருளாதார வளர்ச்சி பெறும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
திறன்மிகு தொழிலாளர்கள் உள்ள மாநிலம், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் கொண்ட மாநிலம் என்று பல்வேறு சிறப்பம்சங்களை தமிழ்நாடு கொண்டிருக்கிறது. மாநிலத்தில் பெண்களின் கல்வியறிவும், வேலைவாய்ப்பு விகிதமும், நாட்டின் சராசரியைவிட அதிகமாக இருக்கிறது. நாட்டிலேயே பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று உலகம் முழுவதும் தெரியும்.
உட்கட்டமைப்பு தொடர்பான தொழில் துறை வளர்ச்சி, வணிகம் செய்வதை எளிதாக்குவது, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வாழ்க்கை வசதிகளை எளிதாக்குவது, இவையெல்லாம் அரசின் குறிக்கோள்கள். இதை செயல்படுத்துவதற்காகதான் எங்களுடைய கடமையாக கருதுகிறோம்.
உலகம் எங்கும் இருக்கும் முதலீட்டாளர்கள் விருப்பத்தோடு தேர்வு செய்யும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்பதற்கு இன்றைய நிகழ்வே ஒரு எடுத்துக்காட்டு.
130-க்கும் மேற்பட்ட ‘ஃபார்ச்சூன் 500' நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்துள்ளதும், தமிழ்நாட்டின் முதலீட்டு ஈர்ப்புத் திறனுக்கு அத்தாட்சியாக விளங்குகிறது.
மிகுந்த திறமையும், படைப்பாற்றலும் கொண்டவர்கள், தமிழ்நாட்டின் துடிப்பான இளைஞர்கள். நம்முடைய இளைஞர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில், பல்வேறு வகைகளில் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். எனவே, எங்கள் இளைஞர்களின் திறன்களை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று முதலீட்டாளர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக என்னுடைய வாழ்த்துகளை தெரிவிப்பதோடு. ஒவ்வொரு திட்டத்தின் சுமுகமான செயல்பாட்டுக்கும் சாதகமான சூழலை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு மனப்பூர்வமான ஆதரவளிக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.