'அவசரநிலை பிரகடனம்' குறித்து 50 ஆண்டுகள் கடந்தும் விவாதிப்பதில் என்ன பயன்? - ப.சிதம்பரம் கேள்வி !
அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் தவறுகள் குறித்து விவாதிப்பதில் என்ன பயன் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஜூன் 25-ந்தேதி 'அவசர நிலையை' அறிவித்தார். அப்போது அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியாவின் கருப்பு நாள் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதனை விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் ஜூலை 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் 'அவசர நிலையை' ஒரு தவறு என்பதை இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் - திருவள்ளூரில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
"பாஜக ஏன் இன்னும் பின்னோக்கி 18-வது அல்லது 17-வது நூற்றாண்டு காலத்திற்கு செல்லவில்லை? தற்போது வாழும் சுமார் 75 சதவீத இந்தியர்கள் 1975-க்கு பிறகு பிறந்தவர்கள்தான். 'அவசர நிலையை' ஒரு தவறு என அதை இந்திரா காந்தியே ஏற்றுக்கொண்டார். இனி யாரும் எளிதில் 'அவசர நிலையை' அறிவிக்க முடியாதபடி அரசியலமைப்பை நாம் மாற்றியிருக்கிறோம். 'அவசர நிலையால்’ ஏற்பட்ட நன்மை, தீமைகள் குறித்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு விவாதிப்பதால் என்ன பயன் இருக்கிறது? கடந்த காலத்தை பாஜக மறக்க வேண்டும். நாம் கடந்த காலத்தில் இருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டோம்"
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.