#Emergency பட விவகாரம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
எமர்ஜென்சி படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக செப்டம்பர் 25ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்சார் போர்டுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து பாஜக எம்பியாக உள்ளவர் கங்கனா ரனாவத். மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசியல் வருகைக்கு பின் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் எமர்ஜென்சி. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய 21 மாத அவசரநிலையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘எமர்ஜென்சி’.
இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இதன் டீசர் கடந்த மாதம் 14ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் சீக்கியர்களை தவறாக சித்தரித்ததாக கூறி படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக கடந்த 6ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்தப் படத்தின் துணை தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் சென்சார் போர்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, எமர்ஜென்சி படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக செப்டம்பர் 25ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்சார் போர்டுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.