இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் அஞ்சலி - திமுகவுக்கு நன்றி தெரிவித்து இமானுவேல் சேகரன் மகள் பிரபா ராணி பேட்டி!
இமானுவேல் சேகரன் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த திமுகவிற்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என இமானுவேல் சேகரனின் மகள் பிரபா ராணி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 67வது நினைவு தினம் இன்று (செப். 11) அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 7000க்கும் மேற்பட்ட போலீசார்கள் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 150 நவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், கயல்விழி செல்வராஜ், பெரிய கருப்பன், மூர்த்தி, தங்கம் தென்னரசு நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
இந்நிலையில், இமானுவேல் சேகரன் மகள் பிரபா ராணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது,
“தமிழ்நாட்டை ஆண்ட பலரிடம் இமானுவேல் சேகரன் பிறந்த தினத்தை (அக்.09) அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் கடந்த ஆண்டு அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. அத்தோடு மணிமண்டபம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எப்பொழுதும் திமுகவிற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என தெரிவித்தார்.