2 நாள் பயணமாக இந்தியா வரும் எலான் மஸ்க் - பயணத் திட்டம் இதோ!
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், 2 நாள் பயணமாக இந்தியா வர உள்ளார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
கடந்த ஆண்டு ஜுன் மாதம் 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவிற்கு சென்ற பிரதமர் மோடி, நியூயார்க்கில் உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்கை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் பிரதமர் மோடியிடம், 2024-ம் ஆண்டில் தான் இந்தியா வருவதாக எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இம்மாத கடைசியில் எலான் மஸ்க் இந்தியா வர உள்ளார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்திக்கவிருக்கிறார். எலான் மஸ்க் மட்டுமின்றி டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகளும் இந்தியா வர உள்ளனர்.
இது குறித்து எலான் மஸ்க் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், "இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்" என பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், எலான் மஸ்க்கின் இந்திய பயணம் 2 நாள் (48 மணி நேரம்) பயணமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் எலான் மஸ்க் இந்தியா வர உள்ளார்.
அப்போது, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், பிரதமர் நரேந்திர மோடி, பிற அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார். இந்தியாவில் 2-3 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்தை எலான் மஸ்க் அறிவிப்பார் என்று தகவல் தெரிவிக்கின்றது. இந்த சந்திப்பில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகளை தொடங்குவதற்கான திட்டங்கள் பற்றி பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது.