“தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்வு” - யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
2024ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
" தமிழ்நாட்டில் யானைகள் வசிக்கும் 8,989.63 சதுர கி.மீ. பரப்பளவில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 3,054 முதல் 3,071 யானைகள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. அதன் சராசரி அளவாக 3,063 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மொத்த எண்ணிக்கையில் பெரிய யானைகளின் எண்ணிக்கை 40 சதவீதமாக உள்ளன. அவற்றில் ஆண், பெண் யானைகளின் விகிதம் 1 : 2.03 ஆக உள்ளது. பெண் யானை, குட்டி யானைகளின் விகிதம் 1 : 0.40 என உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் வசிக்கும் யானையின் அடர்த்தியின் அளவு 0.34 என்று கூறப்பட்டுள்ளது.

யானைகளின் மொத்த எண்ணிக்கையில் அதிகபட்சமாக நீலகிரி கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் 2,253 யானைகள் வாழ்கின்றன. அடுத்ததாக கோவை வனப்பகுதியில் 323, ஆனைமலையில் 310, ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் 227, அகஸ்தியமலையில் 253 யானைகள் உள்ளன.
இதையும் படியுங்கள் : இமாச்சல பிரதேச கனமழை: 77 பேர் உயிரிழப்பு, 190-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடல்!
2002-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 3,737-ஆக இருந்தது. பின்னர் அந்த எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 2007-ம் ஆண்டு 3,867 ஆகவும், 2012-ம் ஆண்டில் 4,015 ஆக உயர்ந்தது. ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் 2017-ம் ஆண்டு யானைகளின் எண்ணிக்கை 2,761ஆகக் குறைந்தது. பின்னர் 2017-ம் ஆண்டில் 2,761 ஆக உயர்ந்தது.
கடந்த 2023-ம் ஆண்டில் 2,961 என்றிருந்த யானைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 3,063 என்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போதுள்ள யானைகளின் எண்ணிகையில் 40 சதவீதம் பெரிய யானைகளாக உள்ளன. 33 சதவீதம் பெரியவைகளைவிட சற்று சிறிய யானைகளும், 17 சதவீதம் சற்று வளர்ந்த குட்டிகளும், 10 சதவீதம் பால் குடிக்கும் குட்டிகளும் உள்ளன"
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.