யானை உயிரிழந்த விவகாரம் | மருதமலை வனப்பகுதியை ஒட்டி குப்பைகள் கொட்டத் தடை!
கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப்பகுதியில் கடந்த 17ம் தேதியன்று ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவை வனத்துறையினர் யானைகளை கண்காணித்தனர். அப்போது தாய் யானைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
குட்டி யானை யாரையும் நெருங்க விடாமல் விரட்டியதால், சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்ட ஒரியன் என்ற கும்கி யானை உதவியுடன் குட்டி யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் அங்கு விரைந்த கால்நடை மருத்துவ குழுவினரும், கோவை வனக் குழுவினரும் இணைந்து யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் நேற்று (மே 21) யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. யானையை உடற்கூராய்வு செய்தபோது அதன் வயிற்றில் இருந்த 12 மாத ஆண்குட்டியும் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் பெண் யானையின் வயிற்றில் அதிகளவிலான பிளாஸ்டிக்கள் இருந்ததும் தெரியவந்தது.
பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு பெண் யானை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து, கோவை மருதமலை வனப்பகுதியொட்டிய சோமையாம்பாளையம் பஞ்சாயத்து பகுதியில் கிடந்த குப்பைகளை ஜே.சி.பி வாகனம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் இனி குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.