ஏரல் பகுதியில் முதற்கட்டமாக மின்சாரம் வழங்கப்படும் - மண்டல மின் பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!
கனமழை வெள்ளத்தால் சிதைந்த ஏரல் பகுதிக்கு முதற்கட்டமாக இன்று மாலைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும் என திருநெல்வேலி மண்ட ல மின்வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் நியூஸ்7 தமிழுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட பெரும் மழை வெள்ளம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் மழை வெள்ளத்தால் கடந்த 18-ந் தேதி அன்றே பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் ஏராளமான மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது. இதனால் கடந்த 7 நாட்களாக அப்பகுதி மக்கள் மின்சாரம் இன்றி தவித்துவருகின்றனர்.
வெள்ளம் வடிந்தும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் வேதனைக்குள்ளாகி உள்ளனர். தொடர்ந்து நகர்ப்பகுதிகளில் வெள்ளம் வடிந்ததும் அனைத்து பகுதிகளையும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக திருநெல்வேலி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் தலைமையில் கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 600 மின்வாரிய பணியாளர்கள் ஏரல் பகுதிகளில் பணி செய்துவருகிறார்கள். உடைந்த மின்கம்பங்கள், ட்ரான்ஸ்பார்மர்களை சரி செய்யும் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது.
தொடர்ந்து இன்று மாலைக்குக்குள் ஏரல் பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படும் என திருநெல்வேலி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் நியூஸ் 7 தமிழுக்கு தகவல் தெரிவித்துள்ள அவர் தண்ணீர் வடியாத குடியிருப்பு பகுதிகளில் மட்டும் தண்ணீர் முழுமையாக வடிந்ததும் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.