குடிநீரில் பாய்ந்த மின்சாரம்; அலட்சியத்தால் விபரீதம்!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டி தேசிக விநாயகர் தெருவில் உள்ள ஊராட்சி பொதுக் குடிநீர் குழாயில் இன்று காலை பொது மக்கள் தண்ணீர் பிடிப்பதற்காக வந்த போது தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு செய்ததில் குடிநீர் குழாய் அருகிலிருந்த தந்தி கம்பத்திலிருந்து குடிநீர் குழாய்க்கு மின்சாரம் வந்தது தெரியவந்தது.
மின்கம்பமும், தந்தி கம்பமும் அருகருகில் இருந்ததால் மழை பெய்ததில் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் மூலம் மின் கம்பத்திலிருந்து தந்தி கம்பத்திற்கு மின்சாரம் கடந்துள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து விளம்பரப் பதாகைகளை அகற்றியதையடுத்து குடிநீரில் மின்சாரம் வருவது நின்றது. இந்நிலையில் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் கல்லிடைக்குறிச்சிக் கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள், மின்கம்பங்களில் தனியார் விளம்பரப் பதாகைகளையோ, கேபிள் கம்பிகளையோ கட்டக் கூடாது, கட்டியிருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். இனியும் மீறி கட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.