“மின்சார வாரியம் ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது!” - சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்!
மின்சார வாரியம் ஒருபோதும் தனியார்மயப்படுத்தபடமாட்டாது. தொடர்ச்சியாக மின்வாரியம் பொதுத்துறை நிறுவனமாக இருக்கும் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2024-2025ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நலத் திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டீர்கள் எனக் குற்றம்சாட்டினார்.
தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டீர்கள், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டீர்கள், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை எல்லாம் நிறுத்தி விட்டீர்கள் என எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார்.
அதற்கு பதில் அளித்துப் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "தாலிக்குத் தங்கம், இலவச லேப்டாப் திட்டங்களை உங்கள் ஆட்சியிலேயே பலருக்கு வழங்காமல் நிலுவையில் வைத்துவிட்டுத்தான் சென்றீர்கள். நாங்கள் அதை நிறுத்தியதாக கூறுவது தவறு. தாலிக்குத் தங்கம் திட்டம் நிறுத்தப்படவில்லை. அந்த நிதி தற்போது புதுமைப்பெண் திட்டமாக வழங்கப்பட்டு வருகிறது.
நாட்டுக்கு என்ன தேவையோ அதை தேவைக்கேற்ப மேம்படுத்திக் கொள்வதுதான் முதிர்ச்சி அடைந்த சமூகத்திற்கான அடையாளம். மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்கிறீர்கள். நாங்கள் அதை நிறுத்தவில்லை. உலகளவில் செமி கண்டெக்டர்ஸ் பெறுவதில் சிக்கல் இருக்கிறது" எனத் தெரிவித்தார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "மீண்டும் மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா?" எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்து முதல்வரிடம் ஆலோசித்து, நிதி நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து எதிர்கட்சியினரின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்சார வாரியம் ஒருபோதும் தனியார்மயப்படுத்த்படமாட்டாது. தொடர்ச்சியாக மின்வாரியம் பொதுத்துறை நிறுவனமாக இருக்கும் எனவும் சட்டப்பேரவையில் திட்டவட்டமாக தெரிவித்தார்.