செயல்பாட்டுக்கு வந்த மின்விபத்து தடுப்பு செயலி 'Tneb Safety'!
மின் ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் 'Tneb Safety' என்ற பாதுகாப்பு செயலியை தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மின் தடையின் போது மின் திருத்தப் பணிகளில் ஈடுபடும் பராமரிப்பு ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் 'Tneb Safety' என்ற பாதுகாப்பு செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலியானது நேற்று பயன்பாட்டிற்கு வந்தது. இதன் மூலம், மின் ஊழியர்கள் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுகிறார்களா என்பதை அறிய இயலும்.
மின் ஊழியர்கள் பணியில் ஈடுபடுவதற்கு முன் பாதுகாப்பு உபகரணங்களை அணிவது, பணியைத் தொடங்குவதற்கு முன் மின் கம்பிகளை சரிசெய்வது போன்ற பாதுகாப்பு செயல்முறைகளை இந்த செயலி கண்காணிக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிபடுத்துவதன் மூலம் மின் விபத்துகளை தடுக்கவும் உதவுகிறது.
இந்த செயலியை மின் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் விபத்து ஏற்பட்டால் பணியாளர்களே பொறுப்பு எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.