For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

05:10 PM Apr 20, 2024 IST | Web Editor
“தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்”   மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
Advertisement

மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்தால் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisement

அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நிதி பெற்றால்,  தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்தது.  இந்த சட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு,  தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த சட்டத்தின் மூலம் தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது விருப்பமான கட்சிகளுக்கு ரூ.1000 முதல் ரூ 1 கோடி வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி வழங்கலாம்.  தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றால் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க தேவையில்லை.

இந்த திட்டத்தின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை பாஜக பெற்றது. தேர்தல் பத்திர திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “தேர்தல் நிதிப் பத்திரம் என்பது சட்டவிரோதமானது, உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்ததும் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நிறைய ஆலோசனைகள் செய்ய வேண்டியுள்ளது. இதில் முதன்மையாக வெளிப்படைத்தன்மையை தக்கவைத்துக்கொள்ள, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டியுள்ளது. குறிப்பாக கருப்புப் பணம் இதில் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலுமாக நீக்கப்படும்.

தேர்தல் பத்திர திட்டம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோருவது குறித்து மத்திய அரசு இன்னமும் முடிவு செய்யவில்லை. எனவே, மறுபரிசீலனை மனுவா? அல்லது திருத்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய தேர்தல் பத்திரம் திட்டமா? என்பதை மத்திய அரசு இன்னமும் முடிவு செய்யவில்லை. நல்ல ஆலோசனைகளைத் தொடர்ந்து அவை ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரம் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை விவரம் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்திடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement