சூடுபிடிக்கும் தேர்தல் களம் - வயநாட்டில் இன்று #PriyankaGandhi பரப்புரை!
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி இன்று (நவ.3) தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்தது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர்.
வயநாடு தொகுதியில் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 21 பேர் மனு தாக்கல் செய்தனர். இதன் பின்னர் கடந்த 28ம் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரியங்கா காந்தி உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி, நவ்யா ஹரிதாஸ், சத்யன் மொகேரி உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கிடையே, காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி கடந்த மாதம் 28 மற்றும் 29ம் தேதி என 2 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில், வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக
பிரியங்கா காந்தி இன்று (நவ.3) மீண்டும் கேரளாவுக்கு செல்கிறார். அவருடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் வருகிறார். இவர்கள் இருவரும் இன்று (நவ.3) காலை 11 மணியளவில் மானந்தவாடி காந்தி பூங்கா பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகின்றனர். பின்னர் மாலை 3 மணியளவில் அரிக்கோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் இருவரும் கலந்து கொள்கின்றனர்.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் 2வது நாளாக நாளை (நவ.4) கூட்டு பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். காலை 10 மணியளவில் சுல்தான்பத்தேரி, 11 மணியளவில் புல்பள்ளி, 11.50 மணியளவில் முள்ளென்கொல்லி, மதியம் 2 மணியளவில் கல்பெட்டா, மாலை 3.50 மணியளவில் வைத்திரி ஆகிய பகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேச உள்ளனர். 2 நாட்கள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி டெல்லி திரும்புகிறார். ஆனால் பிரியங்கா காந்தி வருகிற 7ம் தேதி வரை வயநாடு தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் திறந்த வாகனத்தில் சென்ற படி வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவார் எனவும், பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவார் என்றும் கூறப்படுகிறது.