For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்தல் முறைகேடு புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு - இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்!

04:29 PM Feb 24, 2024 IST | Web Editor
தேர்தல் முறைகேடு புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு   இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்
Advertisement

பண விநியோகம் குறித்து தகவல் அளிக்க புதிய செயலி அறிமுகம் செய்யவுள்ளதாகவும், தேர்தல் முறைகேடு குறித்த புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு காணப்படும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தமிழ்நாடு, கேரளா, மற்றும் கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை, மத்திய பாதுகாப்புப் படை உள்ளிட்ட செயலாக்க துறை அதிகாரிகளுடன் தேர்தல் தயார் நிலை குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையிலான குழுவினர் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நேற்று சென்னை வந்தனர். நேற்று காலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இன்று காலை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் தமிழ்நாடு காவல்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, வருவாய் புலனாய்வு துறை உள்ளிட்ட செயலாக்க துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு தலைமைச் செயலாளர், உள்துறை, மருத்துவத்துறை, பொதுப்பணி துறை உள்ளிட்ட பல்துறை செயலாளர்கள், தமிழ்நாடு காவல்துறையில் தலைமை இயக்குநர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்திய தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் ராஜிவ் குமார், இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்திய தேர்தல் தலைமை ஆணையர் ராஜிவ் குமார் கூறியதாவது:

“நாங்கள் கடந்த இரண்டு நாட்களாக, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விரிவான ஆலோசனை நடத்தினோம். அனைத்து வாக்காளர்களும் தங்களின் வாக்குகளை இந்த தேர்தலில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். எந்த விதமான ஒளிவு மறைவும் இன்றி தேர்தல் நடக்கும். 

பணப் பட்டுவாடா ஒருபோதும் அனுமதிக்கப்படாது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 68,144 வாக்கு மையங்கள் உள்ளன. அனைத்து வாக்கு மையங்களிலும் சக்கர நாற்காலிகள், மின்சார வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்படும். சக்ஷம் எனப்படும் செயலியில், வாக்களிக்க செல்லும் போது நமது தேவையான வசதிகளை முன்கூட்டியே புக் செய்து கொள்ளலாம். வாக்களார்கள் சுவிதா எனப்படும் செயலியில், தங்கள் வாக்களிக்க ஏதுவான வாக்கு மையம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்

Know Your Candidate (KYC) எனப்படும் செயலியை பதிவிறக்கம் செய்து, வாக்காளர்கள் வாக்களிக்க விருக்கும், வேட்பாளர் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொள்ளலாம். மாநில எல்லைகளில் 145 செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவர். பணப்பட்டுவாடா செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை பாயும்.

இலவச பொருட்கள், மது மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவை கடத்துவது தீவிரமாக கண்காணிக்கப்படும். ஆன்லைன் பேங்கிங் மூலமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதும் கண்காணிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து கருத்துகள் வந்துள்ளன. நாங்கள் அதை ஆலோசனை செய்து முடிவு செய்யும் போது தெரிவிப்போம்.

ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்வது கண்காணிக்கப்படும். ஒரே கணக்கிற்கு, அதிக முறை பணம் பரிவர்த்தனை செய்யும் போது சந்தேகத்தின் பேரில் அது கண்காணிக்கப்படும். சின்னங்கள் முந்தைய தேர்தலில் வழங்கப்பட்டு இருந்தாலும், இந்த முறையும் அதே கட்சிக்கு அதே சின்னத்தை வழங்கவேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. Evm முறை 40 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே முறை தான் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. புதிதாக எதையும் செய்யவில்லை. 

வாக்கு மையங்களில் குடிநீர், செட் மற்றும் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் நிச்சயம் இருக்க வேண்டும். தேர்தல் சம்பந்தமான தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்புகள், குறிப்பிடப்பட்ட தளங்களில் வழங்கப்படும். வதந்திகளை நம்ப வேண்டாம். சைபர் செக்யூரிட்டி செல் மற்றும் சோஷியல் மீடியா செல் ஆகியோர் மூலம் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணிக்கப்படும்

தேர்தல் பத்திரம் மட்டுமல்லாமல், அனைத்திலும் தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் உள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
Advertisement