டெல்லி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் - ஊடகங்களில் முன்பே வெளியானதால் சர்ச்சை!
பாஜகவில் இணையச் சொல்லி மிரட்டல் வருவதாக தெரிவித்த நிலையில் டெல்லி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பே ஊடகங்களில் நோட்டீஸ் வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது.
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21.03.2024 அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவரது வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், அவரை கைது செய்தனர். இதனை அடுத்து டெல்லி மாநில ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது ஏழு நாள் அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் 28 அம் தேதி வரை அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி நிலையில் மேலும் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 2 ஆம் தேதி, தான் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் நான்கு மூத்த தலைவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று வதந்திகள் பரவியதாகவும் தனக்கு பாஜகவைச் சேர்ந்த மிக நெருங்கிய நபர் மூலம் அக்கட்சியில் இணையுமாறு வற்புறுத்தியதாகவும் இதனை நான் ஏற்காவிட்டால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட தயாராக இருப்பதாக அதிஷி பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது டெல்லி அரசியலில் பரப்பாக பேசப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அதிஷியின் கருத்துக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு ஏப்ரல் 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் அதிஷி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் தொடர்பாக ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளதாவது..
“ தேர்தல் ஆணையம் அனுப்பிய "நோட்டீஸ்" எனக்கு வருவதற்கு முன்பே ஊடகங்களில் இதனை பாஜக வெளியிட்டுள்ளது. என்னுடைய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய கருத்துகளுக்கு எதிராக ஏப்ரல் 4ம் தேதிதான் என் மீது பாஜக புகார் கொடுக்கிறது. ஏப்ரல் 5ம் தேதி காலை 11:15 மணிக்கு எனக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகின
ஆனால் ஊடகங்களில் வெளியான பிறகு, அரை மணி நேரத்திற்கு பின்பு தான், மின்னஞ்சல் மூலம் எனக்கு நோட்டீஸ் வந்தது. எனக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்னதாகவே ஊடகங்களில் பாஜக அதனை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பாஜகவின் துணை அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா என்று கேள்வியை எழுப்புகிறது. அனைத்து மத்திய அமைப்புகளும் பாஜகவிடம் மண்டியிட்டு விட்டது என்பது கவலைக்குரிய விஷயம். தற்போது இதில் தேர்தல் ஆணையமும் இணைந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி பல்வேறு பிரச்னைகளில் புகார்களை பதிவு செய்ய முயற்சிக்கும் போது, தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கவில்லை. நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் பாஜக புகார் செய்த 12 மணி நேரத்திற்குள் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இது தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்படுகிறதா ? பாஜகவில் அனுப்பப்படுகிறதா ? என கேள்வி எழுகிறது” என அதிஷி தெரிவித்துள்ளார்.