'அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்' - உயர்நீதிமன்றம் உத்தரவு !
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கக்கூடாது என உத்தரவிடக்கோரி முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதுதொடர்பான மனுக்களை விசாரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது. இந்த தடையை நீக்கக் கோரி ஓ.பி.ரவீந்திரநாத், வ.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீது உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, புதிய தலைமை தேர்வு செய்தது உள்ளிட்ட உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை. உரிமையியல் நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன. தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்துள்ள யாரும் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லை. அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர். அ.தி.மு.க.வில் எந்த பிளவும் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த ஆதரவு அப்படியே தொடர்கிறது.
பொதுக்குழு உறுப்பினர்களும், 65 சட்டமன்ற உறுப்பினர்களில் 61 உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதால், சட்டசபை தேர்தல் நெருங்கிய உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தலையிட்டு சின்னத்தை முடக்கினால் அது கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். கட்சி தனக்கு சொந்தமானது என யாரும் உரிமை கூறாத நிலையில் உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பதால் தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் தரப்பில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் விளக்கத்தைக் கேட்கும் வகையில் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும் என்றும், தற்போது இந்த மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா, இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பன்னீர்செல்வம் கட்சியின் பெயர், கொடி பயன்படுத்த தடை தடை விதித்திருந்தாலும், தற்போது கட்சி உறுப்பினர்கள் மன நிலைமை மாறி பெரும்பாலானோர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். அதனால், இது சம்பந்தமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் சின்னம் ஒதுக்கீடு சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும், உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க உரிமையில்லை என்கிற எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த மனுவினை தள்ளுபடி செய்தும் உத்தரவிடப்பட்டது.