”பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் கூட்டு சதி செய்கிறது”- தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு!
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஜுன் 24 அன்று இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பிற்கு எதிர் கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்ததை மேற்கொண்டு கடந்த ஜீலை 30ல் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இந்த வாக்காளர் திருத்தத்தில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளாதாக எதிர் கட்சிகள் குற்றும் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி யாதவ், பீகாரில் நடைபெற உள்ள தேர்தலில் வாக்குகளைத் திருட தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டு சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், "வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பீகாரில் வாக்குகளைத் திருட தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுகிறது. தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு பிறகு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை 'வாக்குகளின் கொள்ளை' என்றுதான் அழைக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பாஜக தலைவர்களுக்கு இரண்டு வாக்காளர் அட்டைகளைப் பெற உதவுகிறது" என்று அவர் தெரிவித்தார்.