தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டது!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 16-ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்புகள் கடந்த மார்ச் 16-ம் தேதி வெளியானது. அந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து கடந்த ஏப்.19 முதல் ஜூன். 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. வரும் ஜூன் 9 ஆம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கிறார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் வாயிலாக கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் திரும்ப பெறப்பட்டது.
இனி பணம், பொருட்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இருக்காது. அதுமட்டுமின்றி, அரசு வழக்கமான பணிகளை நாளை முதல் மேற்கொள்ளலாம். அரசு புதிய திட்டங்கள் அறிவிப்பது, நிதி உதவி அறிவிப்பது, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட பணிகளையும் நாளை முதல் வழக்கம் போல் மேற்கொள்ள முடியும்.