For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு!

11:13 AM Mar 12, 2024 IST | Jeni
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை  திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு
Advertisement

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அதன் விளைவாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடும் கையெழுத்தானது.

அந்த வகையில் ஏற்கனவே ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும்,  கொமதேக கட்சிக்கு நாமக்கல் தொகுதியும்,  விசிக கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.  சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  ஆனால் எந்தெந்த தொகுதி என்பது முடிவு செய்யப்படவில்லை.  அதே போல்,  மதிமுகவுக்கு ஒரு தொகுதியும்,  காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதியும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டன.  ஆனால்எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று இரண்டு கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 29-ம் தேதி திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தான நிலையில்,  ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் எவை என அடையாளம் காண்பது தொடர்பான ஆலோசனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  திமுக குழு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  சிபிஎம் குழுவினர் இதில் கலந்துகொண்டனர். இந்நிலையில்,  மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன்,  “மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  இந்த இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவதோடு,  40 தொகுதியிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.  நாங்கள் வென்ற கோவையை விட்டுக் கொடுத்தோம்.  அவர்கள் வென்ற திண்டுக்கல்லை எங்களுக்கு விட்டுக் கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

1977-ல் முதன் முறையாக மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது.  அப்போது திமுக கூட்டணியில் ஏ.பாலசுப்பிரமணியன் போட்டியிட்டு 2-வது இடம் பிடித்தார்.  பின்பு, 1989 தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் என்.வரதராஜன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.  பின்னர் 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.பாண்டி போட்டியிட்டார்.  இந்நிலையில் திண்டுக்கல் தொகுதியில் 4-வது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை களமிறங்குகிறது.

இதையும் படியுங்கள் : சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை - கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

கடந்த முறை மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  இந்நிலையில் இந்த முறை மீண்டும் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால்,  சு.வெங்கடேசன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Tags :
Advertisement