மியான்மரில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் எட்டு பேர் பலி!
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டில் இராணுவப்புரட்சி நடைபெற்றது. இதன் மூலம் அந்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அகற்றப்பட்டு ராணுவம் ஆட்சி செய்து வருகின்றது. இதனை தொடர்ந்து ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. இந்த உள்நாட்டுப் போரின் காரணமாக அங்கு சுமார் 35 லட்சம் மக்கள் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் ராணுவ அரனது, வரும் டிசம்பரில் மியான்மர் நாட்டின் தேர்தல் நடத்தப்படும் எனஅறிவித்திருந்தது. ஆனால் கிளர்ச்சியாளர்கள் இந்த தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி மத்திய சாகாயிங் மாகாணத்தில், மண்டாலாய் நகரத்தின் அருகே ராணுவத்துக்கும், கிளர்ச்சியார்களுக்கும் இடையில் கடும் மோதல் நிகழ்ந்தது. இந்த மோதலில் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கி வந்த குழுவின் வாகனம் தாக்குதல்கள் நடைபெற்ற பகுதியில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த 8 பேரில் ராணுவ அரசுக்கு எதிராகச் சண்டையிட்ட கிளர்ச்சியாளர் ஒருவரும் கொல்லப்பட்டார் என கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரையில் அரசின் தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் இல்லை.