"எடப்பாடியின் எழுச்சி பயணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சி பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
24ஆம் தேதி கந்தர்வகோட்டை ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியிலும், 25ஆம் தேதி புதுக்கோட்டை விராலிமலை திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதியிலும் கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து சிறப்புரையாற்றுகிறார்
இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வரவேற்பு அளிப்பதற்கு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக எல்இடி வாகனம் மூலமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரச்சார வாகனத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,
"புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். 24 ஆம் தேதி கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் நடக்கும் அதிமுக மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதே போன்று 25ஆம் தேதி புதுக்கோட்டை விராலிமலை மற்றும் திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் இரண்டு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட வடக்கு மற்றும் தெற்கு அதிமுக சார்பில் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்களிடமும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்கம் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும். மாநாட்டிற்கு வரும் கூட்டம் அடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என்று நிரூபித்துக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.