தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில்#EdapadiPalanisamy ஆஜர்!
திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜரானார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தைச் செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.