"எடப்பாடி பழனிச்சாமியிடம் அரசியல் முதிர்ச்சியை எதிர்பார்க்கிறேன்" - #Annamalai பதிலடி!
எடப்பாடி பழனிச்சாமியிடம் சிறந்த அரசியல் முதிர்ச்சியை எதிர்பார்ப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,
“கருணாநிதி 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதை அரசியலாக பேசுகிறார்கள். பாஜகவும், திமுகவும் எதிரும் புதிருமான கருத்துக்களுடன் களத்தில் உள்ளது. கருணாநிதிக்கு சிறப்பு நாணயம் வெளியிட்டத்தில் மகிழ்ச்சி அடைகிறோம். காமராஜர், அண்ணா, ராதாகிருஷ்ணன், எம்ஜிஆர் ஆகியோருக்கு எல்லாம் நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ஆளும் திமுக, கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியிட வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கியது. திமுகவும்-பாஜகவும் ஒரே மேடையில் இருந்ததை அதிமுக பொதுச் செயலாளர் அரசியல் கலந்து பேசுவது வேதனையாக உள்ளது. பாஜக ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பார்க்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்புகிறேன். எதிரும் புதிருமாக இருந்தாலும் அரசியல் நாகரீகம் வேண்டும். ஒரு தலைவரை மதிப்பது தான் அரசியல் நாகரிகம். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விருப்பப்படி கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றோம். அரசியல் கலக்காமல் பெருந்தன்மையோடு செயல்பட்டோம்.
எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் புரிதல் இப்படித்தான் உள்ளது. ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் சமரசம் செய்வது எனது வேலை கிடையாது. 1980ல் இருந்த அரசியல் சூழ்நிலை தற்போது தமிழ்நாட்டில் இல்லை. மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வரவேண்டும் என்ற முதிர்ந்த கட்சியாக பாஜக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியிடம் சிறந்த அரசியல் முதிர்ச்சியை எதிர்பார்க்கிறேன். நாளை ஜெயலலிதாவிற்கு இதுபோன்று விழா கொண்டாடும்போது இதே போன்று EPS செயல்பட முடியுமா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் முதலமைச்சராக இருந்துள்ளார். ரகசிய உறவு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?எடப்பாடி பழனிசாமி மனதில் எவ்வளவு அழுக்கு உள்ளது. அவரது மனதில் அவ்வளவு ஜாதிய வன்மம் உள்ளது. அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியானவரா? முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறு பேச முடியுமா? எம்ஜிஆர்க்கு இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை கொண்டாட தவறியது அதிமுக செய்த தவறு.
இந்த நாணய வெளியீட்டு விழாவை, கருணாநிதியின் புகழ் நாடு முழுவதும் பரவ திமுக பயன்படுத்திக் கொண்டார்கள். மாற்று சிந்தாதத்தில் உள்ள தலைவராக இருந்தாலும் மக்களின் நலனுக்காக சேவை செய்தவர்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்துவோம்”
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.