108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் - டிஜிபி அலுவலகத்தில் புகார்!
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு 108 அவசரகால ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச.) சார்பாக காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தின்போது, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டும் தொனியில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. "மீண்டும் 108 ஆம்புலன்ஸ் வந்தால், ஓட்டுநரே நோயாளி ஆகி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவாகும்" என்று அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. இருளாண்டி, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழனிசாமியின் பேச்சு முற்றிலும் தவறானது என்றும், வயதான ஒரு நோயாளிக்கு மருத்துவ உதவி அளிக்கவே ஆம்புலன்ஸ் சென்றது என்றும் தெளிவுபடுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர். அவர் இதுபோன்று பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது. அவரது பேச்சு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் மனதை புண்படுத்தியுள்ளது. எனவே, அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறும்" என்று எச்சரித்தார். மேலும், போராட்டங்களுக்கு காவல்துறை உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.