காமராஜர் அவமதிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்த எடப்பாடி பழனிசாமி!
விருதுநகரில் பிரச்சாரப் பயணத்தின்போது பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, பெருந்தலைவர் காமராஜர் குறித்து தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா அவதூறாகப் பேசியதைக் கடுமையாகக் கண்டித்தார்.
"இந்திய அளவில் விருதுநகர் மண்ணிற்குப் பெருமை சேர்த்தவர் பெருந்தலைவர் காமராஜர். அத்தகைய மண்ணில் நின்று பேசுவது எனக்குக் கிடைத்த பாக்கியம்," என்று தனது உரையைத் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. காமராஜரின் தன்னலமற்ற சேவை, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான அவரது பல்வேறு திட்டங்கள் ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார். அத்தகைய ஒரு தலைவரைப் பற்றி திருச்சி சிவா அவதூறாகப் பேசியது கண்டிக்கத்தக்கது என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்கு எந்தக் கண்டனமும் தெரிவிக்காதது வருந்தத்தக்கது என்றும் கூறினார்.
"தன்னலமற்ற தலைவர்களை அவதூறாகப் பேசும் பண்பற்ற தி.மு.க., அடுத்த ஆண்டு காற்றில் கரைந்து போகும்" என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார்.
அ.தி.மு.க ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரம் பின்தங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், 50 மாத தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது, எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன, அந்த ஒப்பந்தங்களின் நிலை என்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால், தி.மு.க.விடம் பதில் இல்லை என்றும் விமர்சித்தார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கொடுத்த வாக்குறுதியையும் அவர் சுட்டிக்காட்டினார். உதயநிதி ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் "நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் தெரியும்" என்று கூறியதாகவும், இதுவரை அந்த ரகசியம் என்னவென்று வெளியிடவில்லை என்றும் கிண்டல் செய்தார்.
"பொய்யைச் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் நமக்குத் தேவையா?" என்று கேள்வியெழுப்பினார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடினார். கடந்த ஆறு மாதங்களில் ஆறு காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், மக்களுக்கு எப்படிப் பாதுகாப்பு இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை அதிகரித்துவிட்டதாகவும், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 20 நாட்களில் 11 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டதோடு, "குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதே தி.மு.க.வினர் தான், அதனால்தான் சட்டம் ஒழுங்கு சரி செய்யப்படவில்லை" என்று குற்றம் சாட்டினார்.