For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"எடப்பாடி பழனிச்சாமி இரட்டை வேடம் போடுகிறார்" - அமைச்சர் கே.என்.நேரு!

அதிமுக ஆட்சியில் கையெழுத்து போட்டுவிட்டு, இன்று சொத்துவரி உயர்வை எதிர்க்கிறது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
03:44 PM May 24, 2025 IST | Web Editor
அதிமுக ஆட்சியில் கையெழுத்து போட்டுவிட்டு, இன்று சொத்துவரி உயர்வை எதிர்க்கிறது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
 எடப்பாடி பழனிச்சாமி இரட்டை வேடம் போடுகிறார்    அமைச்சர் கே என் நேரு
Advertisement

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

Advertisement

"ஓலைக் குடிசைகள், ஓட்டு வீடுகளுக்குக் கூட பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது’’ என வழக்கம் போலவே ’பச்சைப் பொய்’ பழனிசாமி பொய்களைச் சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடும் அறிக்கைகள் ஒவ்வொன்றும் அவருக்கே பாதகமாக முடிகிறது. அதில், இன்றைய வரவு சொத்து வரி உயர்த்தப்பட்டதாக வெளியாகியிருக்கும் அறிக்கை.

'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதைச் சற்று உணராமல் ஒன்றிய பாஜக அரசு கைநீட்டிய இடங்களில் எல்லாம் அதிமுக ஆட்சியில் இருந்த போது எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டதன் விளைவால்தான் நாம் மத்திய அரசின் பிடிகளில் சிக்கித் தவிக்கிறோம்.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-ஆவது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 'மொத்த மாநில உற்பத்தி வளர்ச்சிக்கு (GSDP) நிகராக நகர்ப்புறச் சொத்துக்களின் வரிகளை உயர்த்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களை (Grants to Urban Local Bodies) பெற வேண்டுமெனில் சொத்துவரியை உயர்த்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயித்து சொத்துவரி வசூலில் வளர்ச்சியைக் காட்ட வேண்டும்’ சொன்னது.

'சமீபத்திய 5 ஆண்டுகளின் மாநில மொத்த உற்பத்தியைக் கணக்கிட்டு ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் சொத்துவரி வசூலிக்க வேண்டும். அப்படி வசூலித்தால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் விடுவிக்கப்படும்’ என்ற நிபந்தனையை 15-ஆவது நிதிக்குழு விதித்தது.

ஒருவேளை தமிழ்நாடு அரசு இதை கடைப்பிடிக்காத பட்சத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021-26 வரை நமக்குக் கொடுக்கப்பட வேண்டிய மத்திய அரசின் மானியம் ரூ.4 லட்சத்து 36 ஆயிரத்து 361 கோடி நிறுத்தி வைக்கப்படும், அதோடு தூய்மை இந்தியா திட்டம், அம்ரூட் 2.0 திட்டம் ஆகியவற்றிற்கான நிதியும் ஒதுக்கப்படாது. மோடி அரசு இப்படிக் கடுமையான விதிகளை 15-ஆவது நிதியாணையத்தின் மூலம் விதித்த போது தங்களுடைய சுயநலத்துக்காக மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டுக் கையெழுத்திட்டவர்தான் அன்றைக்கு ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி. அதனால்தான், ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்வு என்பது நடைமுறைக்கு வந்தது.

உள்ளாட்சி அமைப்புகளை ஊழல் செய்வதற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அதன் மூலம் ஒவ்வொரு சாமானிய மக்களின் மீதும் தலையில் இடியை இறக்கினார். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தார். அதன் மூலம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் எந்தத் தடையுமின்றி அந்த உள்ளாட்சி அமைப்புகளில் நேரடியாகப் பல்லாயிரம் கோடி ஊழல்களையும் முறைகேட்டையும் செய்து கல்லா கட்டியவர்தான் அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி. அதற்குத் துணை போனவர்தான் அன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

திராவிட மாடல் ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தியது. அதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளை ஒழுங்குபடுத்தி கிராம சபைக் கூட்டங்கள் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்டியவர் எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

எடப்பாடி பழனிச்சாமி மோடி அரசின் அடிமையாகி கையெழுத்து போட்டதால், 15-ஆவது நிதியாணையம் சொத்து வரி உயர்வைக் கட்டாயமாக்கியது. அதனால், வேறுவழியின்றித் தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட வேண்டி நிலைக்குத் தள்ளப்பட்டது. ஏழைகள் பாதிக்காத வண்ணம் மிக மிகக் குறைந்த அளவு சொத்து வரியை விதிக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்காத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாகப் பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சொத்து வரி மிக மிகக் குறைவாகவே விதிக்கப்பட்டு வருகிறது.

முந்தைய அதிமுக ஆட்சியில் 30 சதவிகிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டதால் தான் சில நூறு ரூபாய் மட்டும் வரியாகக் கட்டி வந்த மக்கள் ஆயிரங்களில் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. வரி விதிக்கக் காரணமானவரே சொத்து வரி உயர்வைப் பற்றி ஒப்பாரி வைக்கிறார். அதையெல்லாம் மறந்துவிட்டு திமுக அரசின் மீது களங்கம் கற்பிக்க அவதூறுகளை அள்ளி வீசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

மத்திய அரசு இப்படிக் கடுமையான விதிகளை 15-ஆவது நிதியாணையத்தின் மூலம் விதித்த போது அவர்களோடு நட்புறவில் இருந்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது தமிழ்நாடு அரசு தான் சொத்து வரி உயர்வுக்குக் காரணம் என்று சொல்வது தானும் தனது மத்திய பாஜக எஜமானர்களும் சேர்ந்து செய்த துரோகத்தை மூடி மறைக்க மட்டுமே.

பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், இறுதியில் மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற கோயபல்ஸ் கோட்பாடு போல, பழனிசாமி சளைக்காமல் திரும்பத் திரும்ப ஒரே பொய்யைப் பேசி அதை உண்மையாக்க முயல்வதில் கோயபல்ஸ்ஸையே ஓவர் டேக் செய்து, வாழும் கோயபல்ஸ் ஆக மாறியிருக்கிறார்.

சொத்துவரி உயர்வுக்குக் காரணம் திமுக அரசுதான் என்ற பொய்யை இன்னும் எத்தனை காலம் பேசிக்கொண்டிருக்கக் போகிறீர்கள் பழனிசாமி. அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கான சொத்து வரியைத் தமிழ்நாடு முழுவதும் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் சொத்துவரி 1.4.2018 முதல் அமல்படுத்தப்பட்டது. அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் மக்களிடம் இருந்து உயர்த்தப்பட்ட சொத்து வரியை வசூலித்தார்கள்.

2019 நவம்பரில் பேட்டி அளித்த அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, "சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’’ எனச் சொன்னார். ’தற்காலிகம்’ என்றால் அந்தச் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய முடியாது என்று அர்த்தம். அவர்களே அன்றைக்கு அப்படிச் சொல்லிவிட்டு, இன்றைக்குச் சொத்து வரி உயர்வுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி.

2018 ஜூனில் சட்டசபை கூட்டத்தொடரில், அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி 1919-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவைத் தாக்கல் செய்தார். அதில், ’உரிய காலத்திற்குள் சொத்துவரியைக் கட்டத் தவறுபவர்களுக்கு, வட்டி விதிக்கும் நடைமுறை தற்போது இல்லை.

4-ஆவது மாநில நிதி ஆணையம், சொத்து வரியைக் காலம் தாழ்த்திச் செலுத்துவோருக்கு, வட்டி விதிப்பதற்கான அவசியம் குறித்து ஆய்வு செய்யுமாறு, அரசுக்குப் பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்த அரசு, அதை ஏற்பது என முடிவு செய்துள்ளது’ என்று வேலுமணி கூறினார். அன்றைக்கு மாநில நிதி ஆணையம் சொன்னதை ஏற்றுக் கொண்ட அதிமுகதான், இன்றைக்குச் சொத்து வரி உயர்வுக்கு ஓலம் இடுகிறது.

சொத்து வரி உயர்வைக் கண்டிக்கிற அதிமுக, அதனைக் கட்டாயப்படுத்திய மத்திய அரசோடு கூட்டணியில் இருந்தபோது அதனை மக்களிடம் மறைத்தது ஏன்? உள்ளாட்சிகளின் வளர்ச்சிக்கு நிதி வேண்டும் என்றால் வரியை உயர்த்தியே ஆக வேண்டும் என்று எடப்பாடி அரசு போட்ட கையெழுத்தால் கட்டாயப்படுத்துகிறது ஒன்றிய அரசு.

வரியை உயர்த்த உண்மையான காரணத்தை மு.க.ஸ்டாலின் அரசு சொன்னால் திசை திருப்பும் வகையில் பொய் அறிக்கை வெளியிடுகிறது அதிமுக. ஆட்சியில் இருந்த போது ஆதரித்து கையெழுத்து போட்டுவிட்டு, இப்போது சொத்துவரி உயர்வை எதிர்க்கிறது. அம்பி, ரெமோ என இரட்டை வேடம் போட்டு அந்நியன் படத்தில் வரும் வசனம் போல ’பின்றியே’ என்று தான் பழனிசாமியை சொல்லத் தோன்றுகிறது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement