தேசிய விருது வென்ற தமிழ் திரைக் கலைஞர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் திரையுலகில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் படங்களுக்கு கிடைத்த இந்த அங்கீகாரம், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தேசிய விருதுகளில், 'Parking' திரைப்படம் தனிச்சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை இந்த படத்தின் படக்குழுவினர் பெற்றுள்ளனர். இத்திரைப்படத்தின் வெற்றியின் பின்னணியில் உள்ள சிறந்த திரைக்கதைக்காக இயக்குனர் திரு. ராம் குமார் அவர்களும் தேசிய விருதை வென்றுள்ளார்.
மேலும், நடிப்பில் முத்திரை பதித்த திரு. எம்.எஸ்.பாஸ்கர், அதே படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்று, ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், 'Vaathi' திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்று தமிழ் திரையுலகிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். அதேபோல, 'LittleWings' என்ற ஆவணப் படத்திற்காக, சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை சரவணமருது சௌந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோர் வென்றுள்ளனர்.
இந்த வெற்றிகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, "தங்களின் தொடர் கலைப் படைப்புகள் வாயிலாக, மக்களை மென்மேலும் மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் செய்திட வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளைச் சார்ந்த படக்குழுவினர் மற்றும் கலைஞர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த விருதுகள், தமிழ் திரையுலகின் திறமையையும், கலைப்படைப்புகளின் தரத்தையும் உலக அளவில் உயர்த்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.