குமரி அனந்தன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் (வயது 93). வயது மூப்பு காரணமாக குமரி அனந்தன் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். கடந்த 4 தினங்களுக்கு முன்பு அவரது உடல் நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது மூப்பு மற்றும் சிறுநீர் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று (ஏப்.8) இரவு குமரி அனந்தன் சிசிக்கை பலனின்றி உயிரிழந்தார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையான இவர் வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் குமரி அனந்தனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்தாவது,
"தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். பாசமிகு தந்தையாரை இழந்து சொல்லொண்ணா துயரில் வாடும் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த குமரி அனந்தனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.