தபால் கார்டுகளுடன் வீட்டுக்கே வரும் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு! விருதுநகரில் ஆச்சரியத்தில் மக்கள்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஒரு புதிய முயற்சியைக் கையாண்டுள்ளார்.
அதன்படி சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தபால் மூலமாக தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசுகையில், "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் வருகை விருதுநகர் மாவட்டத்திற்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்கும்.
மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, கழகத்தின் வளர்ச்சிப் பணிகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த சுற்றுப்பயணம் அமையும். இச்சிறப்புமிகு நிகழ்வில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பதற்காக, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தபால் மூலம் அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளோம்.
மேலும் ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டரும், கழகத்தின் தூணாக செயல்பட்டு, இந்த பயணத்தை ஒரு மாபெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய தனிப்பட்ட அழைப்புகள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஒரு சிறப்பு உணர்வை உருவாக்கி, எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்கு உற்சாகமான வரவேற்பை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.