ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்த பாடகர் எட் ஷீரன்... ஷாக் கொடுத்த பெங்களூரு காவல்துறை!
லண்டனைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் எட் ஷீரன், இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் அவரின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எட் ஷீரனுடன் இணைந்து ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்று பாடியிருந்தார். இது இருவரின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து எட் ஷீரன் இன்று பெங்களூர் என்ஐசிஇ மைதானத்தில் தனது இசைக் கச்சேரியை நடத்த திட்டமிட்டிருந்தார். அதன்படி பெங்களூர் சென்ற அவர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சர்ச் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள சாலையோரத்தில் கிடார் வாசித்தபடி தனது Shape of you பாடலை பாடியுள்ளார்.
அவர் பாடிக்கொண்டிருந்தபோது அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அப்போது அங்கு வந்த போலீஸ் ஒருவர், எட் ஷீரன் பாடும்போது மைக் வயரை கழற்றி, அனுமதி பெறாமல் பொது இடங்களில் பாடக்கூடாது என கூறியுள்ளார். முன்கூட்டியே அனுமதி பெற்றதாக எட் ஷீரன் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைராலான நிலையில், நெட்டிசன்கள் பலர் முன் அனுமதி இன்றி எட் ஷீரன் பாடியதால்தான் இப்படி நடந்துள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.