For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாஜகவிற்கு ஆள் சேர்க்கும் ED பார்முலா திமுக-வை துரும்பளவு கூட அசைக்காது” - அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை!

“பாஜகவிற்கு ஆள் சேர்க்கும் ED பார்முலா திமுக-வை துரும்பளவு கூட அசைக்காது என அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
05:31 PM Mar 20, 2025 IST | Web Editor
“பாஜகவிற்கு ஆள் சேர்க்கும் ed பார்முலா  திமுக வை துரும்பளவு கூட அசைக்காது”   அமைச்சர் எஸ் ரகுபதி அறிக்கை
Advertisement

தொகுதி சீரமைப்பின் பெயரால் பாஜக போட்டிருந்த பாசிசத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்பலப்படுத்திவிட்டார் என்ற ஆத்திரத்திரத்தில்  அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவிவிட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “அமலாக்கத் துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு அஞ்சாது, என்பதை அறியாத ஆதிக்கவாதிகளின் அராஜக நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்குக் குட்டு வைத்திருக்கிறது உயர் நீதிமன்றம். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிலேயே உச்ச நீதிமன்றத்தால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட அமலாக்கத்துறை தற்போது மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது.

தமிழ்நாட்டின் போர்க்குணத்தை அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் எதிர்கொள்ளத் திராணி இல்லாத பாஜக, தனது அச்சுறுத்தல் ஆயுதத்தை அமலாக்கத் துறை மூலம் நீட்டியது. பாஜகவின் ஆணவத்திற்கான அடிதான் உயர்நீதிமன்றம் இப்போது எழுப்பிய கேள்விகள்.

அமலாக்கத்துறை என்றால் என்ன? அதன் அதிகாரங்கள் என்னென்ன..? - News7 Tamil

"இரவில் சோதனை நடக்கவில்லை; அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்; அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை; யாரையும் துன்புறுத்தவில்லை” என்றெல்லாம் உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சொன்ன போது,  “பொய் சொல்ல வேண்டாம். அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது” என நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. 'டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக மார்ச் 25-ஆம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது’ என அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் எனத் தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் எப்படித் தடுத்து வைக்க முடியும்?  அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதைச் செயல்படுத்திய விதம் தவறு. அமலாக்கத்துறை சோதனை நடத்தக் காரணமான வழக்குகள், விவரங்களைப் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும். இரவு வரை பெண் அதிகாரியை சிறைபிடித்து சோதனை நடவடிக்கை எடுப்பது அச்சுறுத்தல். என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது உயர் நீதிமன்றம்.

எதிர்க் கட்சிகளை மிரட்டுவதற்காக அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ, தேர்தல் ஆணையம் போன்ற அதிகார அமைப்புகளைத் தனது கைப்பாவையாக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. பாஜக ஆளாத மாநிலங்களில் முகாந்திரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளைப் புனைந்து, எதிர்க்கட்சிகளை முடக்குவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர்களையும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களையும் கைது செய்து, ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவின் அடியாளாகச் செயல்படுகிறது அமலாக்கத் துறை. மோடி அரசின் 10 ஆண்டு ஆட்சியில் அரசியல் தலைவர்கள் மீது பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கை 193 ஆனால், இதுவரை 2 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது CONVICTION RATE வெறும் 1.03 சதவிகிதம்தான். இதனை நாடாளுமன்றத்திலேயே பாஜக ஒத்துக் கொண்டிருக்கிறது. சோதனைகள், கைதுகள் மூலம் தனது அரசியல் எதிரிகளை மிரட்டிப் பழிவாங்கவும் அவர்களது செயல்பாடுகளை முடக்கவும் அமலாக்கத் துறை அரசியல் சதியை நடத்தி கொண்டிருப்பதைத்தான் CONVICTION RATE வெளிக்காட்டுகிறது.

அமலாக்கத் துறையால் வழக்குகள் பதியப்பட்டவர்கள், பாஜகவில் இணைந்ததும், அவர்கள் மீதான நடவடிக்கைகள் நின்றுவிடுவது அமலாக்கத்துறையின் அறிவிக்கப்படாத விதியாகும். அமலாக்கத்துறை சோதனை நடத்துவதும் வழக்கு பதிவதும் முழுக்க முழுக்க பாஜகவுக்கு ஆள்பிடிக்க மட்டுமே. எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களைக் குறிவைத்து சோதனை நடத்துவது, அதை வைத்து வழக்கு போடுவேன் எனச் சொல்லி மிரட்டி அவர்களை பாஜகவிற்கு ஆதரவாளராக மாற்றுவது என மத்திய பாஜக அரசின் அடியாள் துறையாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. பாஜகவின் இந்த ED பேர அரசியலுக்கு அடிபணியாதவர்களை மட்டும் சிறையில் வைத்து மிரட்டிப் பார்ப்பது என்ற மிக மிகக் கேடுகெட்ட கேவலமான வேலையை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது.

அமலாக்கத் துறையை வைத்து பூச்சாண்டி காட்டியதால் பாஜகவோடு இணைந்தவர்களைப் பட்டியல் போட்டால், சுவேந்து அதிகாரி, முகுல் ராய், ஷிண்டே, அஜீத் பவார், பிரேம் காந்த் என அவர்கள் நம்பும் அனுமார் வால் போல அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். வடக்கே அமலாக்கத்துறையை வைத்து பாஜகவிற்கு ஆள் பிடித்த பார்முலாவை இங்கே செய்து பார்க்கலாம் எனக் கணக்கு போடுகிறது பாஜக. முதுகெலும்பில்லாத கோழைகள் வேண்டுமானால் பாஜகவின் சித்து விளையாட்டிற்குப் பயந்து பாஜகவை ஆதரித்து அடிபணியலாம். ஆனால், ஒருகாலமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைக்கோடித் தொண்டனையோ, திமுக அரசையோ துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது. பல மாநிலங்களில் மேற்கொண்ட அமலாக்கத்துறையின் மிரட்டல் உத்தியைத் தமிழ்நாட்டையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழ்நாட்டின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற வகையில் சோதனை மேற்கொண்டது.

தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக முதலமைச்சர் இப்போது எடுத்திருக்கும் முயற்சி நாடாளுமன்ற மட்டுமல்லாது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து கிடைத்திருக்கும் ஆதரவு பாஜக-வை நிலைகுலையச் செய்திருக்கிறது. தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டத் தொகுதி சீரமைப்பின் பெயரால் பாஜக போட்டிருந்த பாசிசத் திட்டத்தை முளையிலேயே முதலமைச்சர் அம்பலப்படுத்திவிட்டார் என்ற ஆத்திரத்திரத்தில் ஆற்றாமையிலும் அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவிவிட்டுள்ளது.

வரும் மார்ச் 22-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு மாநில முதல்வர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிற ஆலோசனைக் கூட்டம் பாஜகவின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. அதனால்தான் அமலாக்கத் துறையை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அமலாக்கத்துறையைப் புனிதமான விசாரணை அமைப்பாகக் காட்டி வந்த பாஜகவின் பிம்பம் தமிழ்நாட்டில்தான் முதல்முறையாகத் துடைத்தெறியப்பட்டது. திண்டுக்கல் மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதானார். கொள்ளையனோடு கூட்டுச் சேர்ந்த காவலனாக அமலாக்கத்துறை பாஜகவோடு கூட்டு வைத்து, பாஜகவின் குற்றங்களுக்குத் துணை போய்க் கொண்டிருப்பது நாட்டிற்கு நல்லதல்ல”

இவ்வாறு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement