உலக நாடுகளிடம் கடன் கேட்டதாக பரவும் செய்தி - பாகிஸ்தான் மறுப்பு!
பஹல்காம் தாக்குதக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் தங்களுக்குள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக பாகிஸ்தான் மீது பொருளாதார நெருக்கடி தரும் வகையில் சிந்து ஒப்பந்த ரத்து, வர்த்தக தடை, துறைமுகத்தை பயன்படுத்த தடை என பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி குறித்து அண்மையில் உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் ஒரு அறிக்கை வெளியிட்டது அதில், தற்போதைய போர் பதற்றம் வெளிநாட்டு கடன் அழுத்தத்தை அதிகரிப்பதோடு, பாகிஸ்தானின் முன்னேற்றத்தையும் பாதிக்கக்கூடும் என்று தெரிவித்தது.
தொடர்ந்து பாகிஸ்தானின் பங்கு சந்தை, பஹல்காம் தாக்குதல் நடந்த தேதியான ஏப்ரல் 22 அன்று 118,312 புள்ளிகளில் இருந்தது. இதையடுத்து தற்போது பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், நேற்றைய(மே.08) நிலவரப்படி 103,060.30 ஆகக் குறைந்து, செங்குத்தான சரிவை சந்தித்தது.
தொடர்ந்து பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பொருளாதார விவகார அமைச்சகத்தின் எக்ஸ் கணக்கில் இருந்து, பொருளாதார நெருக்கடியைக் குறைக்க உலக வங்கியை டேக் செய்து தனது கூட்டாளி நாடுகளிடம் கடன் கேட்பதுபோல் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அந்த கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ள கடன் தொடர்பான பதிவு போலியானது என பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.