போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்- காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் காரணமாக, வழக்கத்தைவிட காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம், சிஐடியு தொழிற்சங்கம் உள்ளிட்ட சில
போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தினசரியாக காஞ்சிபுரத்திலிருந்து வேலை, தொழில், வியாபாரம், பொழுதுபோக்கு, கல்லூரி என சென்னைக்கு பயணம் மேற்கொள்ளும் மக்கள் ஏராளம். இந்நிலையில், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் காரணமாக காஞ்சிபுரம் பணிமனையிலிருந்து 50 சதவீத பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் அனைவரும் ரயில் போக்குவரத்து மூலம் தங்களது பயணத்தை தொடங்கியுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு காலை 5.30 மணி முதல் 10:30 மணி வரை 5
ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வழக்கத்தை விட அதிகளவிலான மக்கள் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். வழக்கமாக, காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு 2500 பேர் ரயிலில் பயணம் செய்யும் நிலையில், இன்று கூடுதலாக 1000 பேர் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.