தொடர் விடுமுறை எதிரொலி - ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையால் பயணிகள் அதிர்ச்சி!
தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் வழக்கத்திற்கு மாறாகக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்ட பயணிகள் பெரும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் உள்ளாகியுள்ளனர்.
இந்த அநியாயக் கட்டணக் கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த, போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகளில் கட்டணங்கள் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளன.கோயம்புத்தூருக்குச் செல்ல வழக்கமாகச் செலவாகும் கட்டணம் ₹1000 - ₹1200 மட்டுமே. ஆனால், தற்போது சில பேருந்துகளில் ₹3950 வரை வசூலிக்கப்படுகிறது.
மேலும் தூத்துக்குடிக்குச் செல்ல ₹3999 வரையும், கன்னியாகுமரிக்குச் செல்ல ₹3300 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண நாட்களில் உள்ள கட்டணத்தை விட சுமார் மூன்று மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.
இந்தக் கட்டண உயர்வால், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் மற்றும் விடுமுறையைக் கொண்டாட நினைத்த நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விடுமுறையை ரத்து செய்யவோ அல்லது அதிக கட்டணம் செலுத்திப் பயணிக்கவோ வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கட்டண உயர்வு தொடர்பாக, பயணிகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டத்தை அழைத்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க உத்தரவிட வேண்டும். அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளைக் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகள் புகார் அளிக்க ஓர் அவசர உதவி எண்ணை (Helpline) உருவாக்க வேண்டும்.
மேலும் பேருந்துகளில் கட்டணம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள, சிறப்புப் படைகள் அமைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் மட்டுமே, மக்களின் சிரமங்களைப் போக்கி, நியாயமான முறையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு ஒரு தீர்வைக் காண முடியும். அரசின் தலையீடு இல்லாமல், இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.