பஹல்காம் தாக்குதல் எதிரொலி | இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாறி மாறி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவா்களின் ஆதரவாளா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். பயங்கரவாதிகளுக்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பஹல்காம் போன்று இனியொரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக தவறான, அவதூறான தகவல்களைப் பரப்பியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த் 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவின் தடை விதிக்கப்பட்டது.மேலும், பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்த நிலையில், இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்களும் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்ல தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.